மீண்டும் வெடித்து சிதறிய இந்தோனேஷியாவின் மவுண்ட் இபு எரிமலை
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மவுண்ட் இபு எரிமலை, ஜூன் 2ஆம் திகதி குமுறியதில் 7 கிலோமீட்டர் உயரத்துக்கு சாம்பலைக் கக்கியது.
இந்த ஆண்டுத் (2024) தொடக்கத்திலிருந்து இதுவரை இந்த எரிமலை 100க்கும் மேற்பட்ட முறை குமுறியுள்ளது.
ஹல்மகேரா தீவில் அமைந்துள்ள இந்த எரிமலை, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆறு நிமிடங்கள் 13 வினாடிகளுக்கு அது விண்ணில் புகையைக் கக்கியதாகக் கூறப்பட்டது.
சாம்பல் கலந்த மணலை அது தொடர்ந்து கக்குவதால் உட்புறங்களிலேயே இருக்கும்படி மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
சுவாசப் பிரச்சினைகளைத் தவிர்க்க முகக்கவசம் அணியும்படிக் குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மே 16ஆம் திகதி இந்த எரிமலை தொடர்பில் ஆக உயரிய விழிப்பு நிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து, எரிமலையின் நான்கு முதல் ஏழு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தைத் தவிர்க்கும்படி சுற்றுப்பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
மவுண்ட் இபு எரிமலை சென்ற ஆண்டு 21,000க்கும் மேற்பட்ட முறை வெடித்தது. சராசரியாக அன்றாடம் 58 முறை அது வெடித்ததாக ‘ஜியாலஜி ஏஜென்சி’ எனும் அமைப்பு தெரிவித்தது.