உக்ரைன் மருத்துவர்களை ராணுவ சேவைக்கு கட்டாயப்படுத்தும் ரஷ்யா!
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழும் மருத்துவர்களை, இராணுவ சேவைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.தற்போதும் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் பலரும் வேறு நாடுகளுக்கு புலம்பெயந்துவிட்டனர்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உக்ரைன் படைகளும் தீவிரமாக போரிடுகிறது. இதனால் ரஷ்ய இராணுவ படைகளும் ஓரளவு இழப்பை சந்தித்துள்ளன. போரில் காயமடையும் ரஷ்ய இராணுவ வீரர்கள் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜியா மாகாணத்தில், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பெடியன்ஸ்கில் பகுதியில் வாழும் ரஷ்ய கடவுச்சீட்டுகளை பெற்ற உள்ளூர் மருத்துவர்களை, இராணுவ சேவைக்கு பதிவு செய்யும்படி ரஷ்யா கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய படைகள் போரில் சந்திக்கும் பேரழிவை சமாளிக்க, ரஷ்யாவில் போதுமான இராணுவ மருத்துவர்கள் இல்லை என தெரிய வந்துள்ளது.இராணுவ மருத்துவர்களின் பற்றாக்குறையை நிரப்புவதற்காக, பெர்டியன்ஸ்கில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் பணிபுரியும் உக்ரைன் மருத்துவர்களை, இராணுவ சேவைக்கு பதிவு செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக உக்ரைன் பொதுப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
உக்ரைன் மருத்துவர்கள் இராணுவ சேவையில் பங்கேற்க மறுத்தால், அவர்களது வேலையை இழக்க நேரிடும் என ரஷ்யாவால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையில், ”படையெடுப்பு நடைபெற்ற ஒரு மாதத்திற்குள், பெர்டியன்ஸ்க் நகரில் வாழும் மக்களுக்கு ரஷ்ய கடவுச்சீட்டுகளை இராணுவ வீரர்கள் வழங்குவதாக அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின” என உக்ரைன் பொதுப்பணியாளர்கள் கூறியுள்ளனர்.
பெர்டியன்ஸ்க் நகரம் கடந்த பிப்ரவரி 2022 முதல் ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.