கார்கிவ்வைத் தற்காக்க உக்ரைன் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்; பைடன் அனுமதி
கார்கிவ் வட்டாரத்தைத் தற்காக்கும் பொருட்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்க அமெரிக்கா விநியோகித்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக உக்ரைனுக்கு விதித்த தடையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விலக்கிக்கொண்டுள்ளார்.இருப்பினும் ரஷ்யத் தாக்குதலிலிருந்து கார்கிவ் வட்டாரத்தைத் தற்காத்துக்கொள்ள மட்டுமே அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
தடையைத் தளர்த்தும்படி உக்ரைன் அதிபர் பைடனுக்கு நெருக்குதல் தந்துவந்தது. இருப்பினும் நேட்டோ கூட்டணிக்கும் மாஸ்கோவிற்கும் சர்ச்சை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பைடன் அதைத் தவிர்த்து வந்தார்.இந்நிலையில், “கார்கிவ் வட்டாரத்தில் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக அமெரிக்கா விநியோகம் செய்த ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்திக்கொள்வதை உறுதிசெய்யுமாறு அதிபர் அண்மையில் உத்தரவிட்டுள்ளார்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி கூறினார்.
“ரஷ்யாவிற்குள் நெடுந்தொலைவுத் தாக்குதல் நடத்த அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையில் மாற்றம் ஏதுமில்லை,” என்று அந்த அதிகாரி கூறினார். வாஷிங்டன் அண்மையில் கியவ்விற்கு வழங்கிய நெடுந்தொலைவு ஏவுகணைகள் குறித்து அவர் அவ்வாறு கூறினார்.
அமெரிக்க அதிபர் பைடன் உக்ரைனுக்கு வழங்கிய அனுமதியை மற்றோர் அமெரிக்க அதிகாரி உறுதிப்படுத்தியதாக ஏஎஃப்பி நிறுவனம் கூறியது.
அமெரிக்க அதிபர் தமது கொள்கையை மாற்றிகொள்ளக்கூடும் என்று சென்ற புதன்கிழமை (மே 29) அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கோடிகாட்டியிருந்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் அவை வழங்கிய நெடுந்தொலைவு ஏவுகணைகளை ரஷ்ய இலக்குகளைத் தாக்கப் பயன்படுத்துவதற்கான அனுமதி தொடர்பில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.
பிரிட்டன், நெதர்லாந்து உட்படச் சில நாடுகள் கியவ்விற்கு அதற்கான அனுமதி இருப்பதாகக் கூறியுள்ளன.