‘ஹாங்காங் 47’ வழக்கு ; ஜனநாயக ஆர்வலர்கள் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, அரசாங்கத்தை சீர்குலைப்பது தொடர்பான வழக்கில் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் 14 பேர் குற்றவாளிகள் என்று வியாழக்கிழமை (மே 30) ஹாங்காங் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருவர் விடுவிக்கப்பட்டனர்.
இது ஹாங்காங்கின் சட்டத்தின் மாட்சிமைக்கும் உலகளாவிய நிதி மையமான அதன் நற்பெயருக்கும் மற்றொரு அடியாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளனர்.
1997ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஹாங்காங்கின் நீதித்துறையின் சுதந்திரத்தை இந்த வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும் என்பதால், அனைத்துலக சமூகம் இதைக் கூர்ந்து கவனிக்கிறது.
கடந்த 2021 தொடக்கத்தில், வீடுவீடாக நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 47 ஜனநாயகக் கட்சியினர் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகளுக்கும் மேலான நிலையில், ஹாங்காங்கின் இந்த மிகப்பெரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சீனாவால் விதிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் “நாசவேலை செய்ய சதி” என்று குற்றம் சாட்டப்பட்டனர்.தண்டனை பின்னர் அறிவிக்கப்படும்.
தேசிய பாதுகாப்பு குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 31 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களில் நால்வர் அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் இருவர், வழக்கறிஞர் லாரன்ஸ் லாவ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் லீ யூ-ஷுன் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமர்சித்துள்ள அமெரிக்காவும் வேறு சில நாடுகளும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 47 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளன.