இலங்கைக்கு சுற்றுலா வந்த ஆஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம்..!
புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் இருந்து எல்ல பிரதேசத்தை பார்வையிடுவதற்காக பேருந்தில் ஏறிய இங்கிலாந்து யுவதியொருவரின் பயணப்பை திருடப்பட்டுள்ளது.
யூடியூப் சேனலை நடத்தும் குறித்த யுவதி, இலங்கை தொடர்பான பயண காணொளி ஒன்றை தயாரிப்பதற்காக நாட்டுக்கு வந்திருந்தார்.ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இங்கிலாந்து யுவதியான இவர், ஸ்கை மெகோவன் என்ற சுற்றுலா தொடர்பான யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.அவர் சுமார் 37 நாடுகளுக்கு விஜயம் செய்து இரண்டாவது முறையாக மே மாதம் 24 ஆம் திகதி இலங்கை வந்தார்.
ரயிலில் எல்ல நோக்கி செல்வதற்காக கோட்டை ரயில் நிலையத்திற்கு சென்றிருந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக ரயில் இரத்துச் செய்யப்பட்டதால், பெஸ்டின் மாவத்தை பேருந்து நிலையத்தில் இருந்து எல்ல செல்வதற்காக பேருந்தொன்றில் ஏறியுள்ளார்.ஆனால், பேருந்தில் இருந்த அவரது பயணப்பையை இரண்டு பேர் திருடிச் சென்றது பேருந்தின் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
தனது பயணப்பை திருடப்பட்டதை அறிந்தவுடன், பேருந்து நிலையத்தில் இருந்த பொலிஸாருக்கு இதுபற்றி தெரிவித்ததோடு, கோட்டை பொலிஸ் நிலையத்திலும் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.அந்த பயணப்பையில் விமான டிக்கெட், கெமரா, மடிக்கணனி மற்றும் $2,000 பணம் இருந்ததாக ஸ்கை மகோவன் கூறுகிறார்.தனது பையைக் கண்டுபிடித்து அல்லது அதைப் பற்றிய தகவல்களை வழங்கும் எவருக்கும் $5,000 செலுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“இலங்கை மக்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதைக் காட்டி எனக்கு உதவுங்கள். இவர்களின் பெயர் மற்றும் வசிப்பிட முகவரியைக் கொண்டு அடையாளம் காட்டினால் நன்றாக இருக்கும். இதைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு $5,000 தருவோம்.” என்றார்.