கொழும்பு புறநகர் பகுதியில் வங்கி ஒன்றி மூன்று நாட்களாக தங்கியிருந்து கொள்ளையிட்ட நபர்
ஜா எல பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியொன்றிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து பெட்டகத்தை அறுத்து பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த நபரை 48 மணித்தியாலங்களுக்குள் கைது செய்ய பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் வங்கி விடுமுறையின் போது சந்தேக நபர் சுவரை உடைத்துக்கொண்டு வங்கிக்குள் பிரவேசித்துள்ளார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில், ஜா எல, கணுவான, கூட்டுறவு கிராமிய வங்கியின் பக்கவாட்டு சுவரை சுமார் ஒன்றரை அடி விட்டத்தில் தோண்டி சந்தேக நபர் உள்ளே நுழைந்துள்ளார்.
அங்கு சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்கம் மற்றும் பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் திருடப்பட்டதுடன், வங்கியின் சிசிடிவி கேமரா அமைப்பும் முற்றிலும் பறிக்கப்பட்டது.
இது தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், வங்கியின் தரையில் கிரைண்டர் பிளேட்கள் கிடத்தப்பட்டமை தொடர்பில் புலனாய்வாளர்களின் பிரதான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
டெல்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றிற்குச் சென்ற பொலிஸார், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிரைண்டர் பிளேட்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி, ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனமொன்றின் சிசிடிவி கமெராக்களை பரிசோதித்த போது, ஒருவர் மூன்று தடவைகள் காரில் வந்து கிரைண்டர்களுக்கு பயன்படுத்தப்படும் பிளேடு, கையுறை, இடுக்கி போன்றவற்றை கொள்வனவு செய்வதை அவதானித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் காரின் பதிவு இலக்கத்தை வைத்து விசாரணை நடத்தியதில் சந்தேக நபர் கொழும்பை சுற்றியுள்ள இரவு விடுதிகளில் சுற்றித் திரிவது தெரியவந்தது.
இதன்படி, கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மடபட கஹாபொல பகுதியைச் சேர்ந்த 34 வயதானசந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, ஜா எல கிராமிய வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களில் ஒரு பகுதி, அவர் தற்காலிகமாக தங்கியுள்ள ராகம ஹொரபேயில் உள்ள அறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கிராமப்புற வங்கியின் பெட்டகத்தை உடைக்கப் பயன்படுத்திய கிரைண்டர் மற்றும் அன்று அவர் அணிந்திருந்த ஆடைகளும் அதே அறையில் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
திருடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதியை கொழும்பு செட்டித் தெரு பகுதியில் உள்ள பல தங்க நகைக் கடைகளுக்கு விற்பனை செய்ததாகவும், அதில் பெறப்பட்ட 24 லட்சம் ரூபாய் கசினோ விளையாட்டிற்காக செலவிடப்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு வென்னப்புவ மானம்பிட்டிய கூட்டுறவு கிராமிய வங்கியின் ஜன்னல்களின் கிரில்களை அறுத்து இவ்வாறு திருடச் செய்ததாக அவர் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஜா எல, வெலிசர, ராகம, மஹாபாகே, கடவத்தை, போன்ற பகுதிகளில் உள்ள தபால் நிலையங்கள், சதொசஸ், உணவு விற்பனை நிலையங்கள் போன்றவற்றிலும் சந்தேகநபர் பணத்தை திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்படாத நிலையில் கசினோ விளையாட்டு மற்றும் சூதாட்டத்திற்கு அதிக அடிமையாகி ஹெரோயின் கடத்தலிலும் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.