பச்சிளங் குழந்தைகள் பலியான சம்பவம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை
தில்லியில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 பச்சிளம் குழந்தைகள் சிக்கி உயிரிழந்துள்ளனர். .
கிழக்கு தில்லி விவேக் விஹார்.- 1 இல் ’பேபி கோ் நியூ பாா்ன்’ என்கிற குழந்தைகள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இரண்டு மாடியில் செயல்படும் இந்த ’பேபி கோ் நியூ பாா்ன்’ மருத்துவ மனையில் சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் தீப்பிடிக்க அருகேயுள்ள மற்ற இரண்டு கட்டிடங்களுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது.
அப்போது மருத்துவா்கள் யாரும் இல்லை. தீவிர சிகிச்சையை பெறும் பிரிவில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டதால் பெற்றோரும் உடனில்லை. நா்ஸிங் ஊழியர்கள் மட்டும் இருந்துள்ளனார். அவர்கள் இந்த தீ யைக் கண்டு சிகிச்சைகளில் இருந்த குழந்தைகளை விட்டு விட்டு வெளியே ஓடிச் சென்று விட்டனர் என தெரிவித்துள்ளனர்.
பின்னா் உள்ளூா் மக்களும், இதை பகுதியைச் சோ்ந்த ’தியாகச் சேவை’ (ஷாஹீத் சேவா தளம்) என்ற தன்னாா்வ தொண்டு நிறுவன உறுப்பினா்களும் குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுத்தனா். சில குடியிருப்பாளா்களும், தியாகச் சேவை தன்னாா்வ அமைப்பு உறுப்பினா்களும், மருத்துவ மனை கட்டடத்தின் பின் வழியாக ஏறி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பில் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தைகளை மீட்டனா். இந்த மீட்பு பணியில் உள்ளே சிக்கியிருந்த 12 குழந்தைகளில் 6 குழந்தைகளை மட்டும் மீட்டனா். மற்ற குழந்தைகள் தீயில் சிக்கிக் கொண்டன.
இந்த இரண்டு மாடி கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டா்கள் வெடித்து சிதறியது தான் தீ விபத்துக்கு காரணம் . இது அருகில் உள்ள கட்டடங்களையும் சேதப்படுத்தியது.
இந்த மருத்துவமனை ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான விவகாரங்கள் குறித்தும் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தையொட்டி மருத்துவமனை நிா்வாகியை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் நேரடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில், அவசரகாலத்தில் வெளியேறுவற்கான வழிகள் மருத்துவமனையில் இல்லை என்பதும், தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.