தனிநாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அம்ரித்பால் சிங் கைது!
இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாதியாக கருதப்படும் அம்ரித்பால் சிங் பஞ்சாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சீக்கியர்களுக்கு என தனிநாடு தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் அமைப்பின் தலைவராக கருதப்படுபவர் அம்ரித்பால் சிங்.
இவர் பஞ்சாபி நடிகர் தீப் சித்து உருவாக்கிய ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பினை நிர்வகித்து வருகிறார். பஞ்சாபில் முக்கிய நபராக குறுகிய காலத்திலேயே வலம் வந்த அம்ரித்பால், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு மிரட்டல் விடுத்ததால் நாடு முழுவதும் அறியப்படும் நபராக மாறினார்.
அவரது நண்பர் லவ் பிரீத் சிங்கை விடுவிக்க வேண்டும் என அம்ரித்பால் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.காவல் நிலையத்தை தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்ட அம்ரித்பால் சிங், காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டு தனது நண்பரை அழைத்து சென்றார்.
இதனால் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கையில் பஞ்சாப் காவல்துறை இறங்கியது. ஆனால் பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார் அம்ரித்பால் சிங். இந்த நிலையில் ஒரு மாத காலத்திற்கு பிறகு மோகா மாவட்டத்தில் பொலிஸாரிடம் சரணடைய வந்த அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டார்.