காணாமல் போன வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர் சடலமாக மீட்பு
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் காணாமல் போன வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அஸீம் அனாா், புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல், கொல்கத்தாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 12-ஆம் தேதி சென்றுள்ளார்.
பாராநகா் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த அவா், யாரையோ சந்திக்கச் செல்வதாக கூறிவிட்டு, வீட்டிலிருந்து சென்றுள்ளாா். அதன் பிறகு திரும்பி வரவில்லை. இதுகுறித்து, காவல்துறையில் அவரது நண்பா் புகாரளித்தாா்.
கடந்த 9 நாள்களாக அன்வருல் குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
தக்காவில் உள்ள அன்வருல் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான், அன்வருல் கொல்லப்பட்டதாகவும், அவரது கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,“அன்வருல் கொலை வழக்கில் தொடர்புடைய மூவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். கொலைக்கான காரணம் விரைவில் தெரிவிக்கப்படும். அவரது உடல் வங்கதேசத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்தியா காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.