சிங்கப்பூர் பாடசாலைகளில் புதிய நடைமுறை!
சிங்கப்பூரில் உள்ள பாடசாலைகளில் சூரியத் தகடுகளை மேற்கூரைகளில் பொருத்தும் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும் அதில் 180க்கும் அதிகமான பாடசாலைகள் கலந்துகொண்டுள்ளன.
ஏறத்தாழ 40 பாடசாலைகளில் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. பூமி தினம் இன்று அனுசரிக்கப்படும் வேளையில், பாடசாலைகளின் நீடித்த நிலைத்தன்மை நடவடிக்கைகள் பக்கம் கவனம் திரும்பியது.
Edgefield உயர்நிலைப் பள்ளியின் 40 விழுக்காட்டு எரிசக்தி, சூரியத் தகடுகளிலிருந்து பெறப்படுகிறது. வகுப்பறையிலுள்ள மின்விளக்குகளும் மின்விசிறிகளும் இவற்றின் துணைகொண்டு இயங்குகின்றன.
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அண்மைக் காலத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. மாணவர்கள் அதன் தாக்கத்தைக் கண்கூடாகப் பார்க்கின்றனர்.
பூமியைப் பாதுகாப்பதில் அவர்களுக்கும் பங்குண்டு என்பதை மாணவர்கள் நன்கு புரிந்துவைத்துள்ளனர் என்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் அன்றாடப் பழக்கவழக்கங்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் பாடசாலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன.
உணவை வீணாக்காமல் இருத்தலின் அவசியமும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.