மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களைத் தேடித் தரும் இணையத் தேடுபொறி!
இணையத்தில் தகவல்களைத் தேடுபவர்கள் கூகுள் (Google), யாகு (Yahoo), இண்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer), அல்டாவிஸ்டா (Altavista) போன்ற ஒரு சில தேடுபொறிகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்தத் தேடுபொறிகள் (Search Engine) தேடுதல் பெட்டியில் நாம் உள்ளீடு செய்த குறிச்சொற்களை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் குறிச்சொல் இணையத்தில் எங்கெல்லாம் இடம் பெற்றிருக்கிறது என்பதைத் தேடிப் பட்டியலிடுகின்றன.
இவற்றிலிருந்து நமக்குத் தேவையான தகவல்கள் இருக்கின்றனவா? என்று மேலும் பல தேடுதலைச் செய்ய வேண்டியிருக்கிறது.
இந்தத் தேடுதல் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பள்ளியில் படிக்கும் மாணவர்களிலிருந்து ஆய்வு மாணவர்கள் வரை அவர்களுக்கான தகவல்களை இணையத்திலிருந்து எளிமையான முறையில் பெற்றுக் கொள்ள ஒரு தேடுபொறி உதவுகிறது. இது தேடுபொறி இல்லை, இது ஒரு கணினி நுண்ணறிவு (Computational Intelligence) என்று இத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தத் தேடுபொறியிலும், பிற தேடுபொறிகளில் குறிச்சொற்களை உள்ளீடு செய்து தேடுவது போல் தேடமுடியும். ஆனால், இந்தத் தேடுபொறி பிற தேடுபொறிகளைப் போன்று முடிவுகளைப் பட்டியலிடுவதில்லை. அதற்குப் பதிலாக, உள்ளீடு செய்த குறியீட்டுச் சொல்லுடன் தொடர்புடைய தகவல்கள் அனைத்தையும் ஒன்றாய்த் திரட்டித் தொகுத்துத் தருகிறது.
உதாரணமாக, இங்கு அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் குறித்த தகவலை அறிய வேண்டுமானால், அவரது பெயரை ஆங்கிலத்தில் “Thomas Alva Edison” என்று உள்ளீடு செய்து தேடுதலுக்கான பொத்தானைச் சொடுக்கி விட்டால் போதும். தாமஸ் எடிசன் (கண்டுபிடிப்பாளர்), அடிப்படைத் தகவல்கள் (Basic Information) என்பதன் கீழ் அவருடைய முழுப்பெயர் (Full Name), பிறந்தநாள் (Date of Birth), பிறந்த இடம் (Place of Birth), இறந்த நாள் (Date of Death), இறந்த இடம் (Place of Death) ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. ஒளிப்படம் (Image), காலக்கோடு (Time Line) வரைபடம், குறிப்பிடத்தக்க உண்மைத் தகவல்கள் (Notable Facts), குடும்ப உறவுகள் (Familial Relationships) எனும் தலைப்பின் கீழ் பெற்றோர் (Parents), உடன் பிறந்தவர்கள் (Siblings), வாழ்க்கைத் துணைகள் (Spouses), குழந்தைகள் (Children) ஆகிய தகவல்கள், அறிவியல் பங்களிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள் (Scientific Contributions & Inventions), குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் (Notable Films), இணையான வரலாற்றுத் தளங்கள் (Associated Historical Sites), விக்கிப்பீடியா சிறு குறிப்புகள் (Wikipedia Summary) போன்ற தலைப்புகளின் கீழ் தகவல் குறிப்புகள் கிடைக்கின்றன.
இந்தக் குறிப்புகளில் சில சொற்கள் அடிக்கோடிட்டுக் (Underline) காட்டப்பட்டிருக்கும், அடிக்கோடிடப்பட்டிருக்கும் சொல்லின் மேல் சொடுக்கினால், அந்தச் சொல்லுடன் தொடர்புடைய பல்வேறு தகவல்களையும் பெற முடியும். ஒவ்வொரு தேடுதலின் போதும், கீழ்ப்பகுதியில் அத்துடன் தொடர்புடைய வினாக்கள் (Related Queries) போன்றவையும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வினாச் சொற்களில் சொடுக்கி அது தொடர்பான கூடுதல் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.
மற்ற தேடுபொறிகளில் சென்னை (Chennai) , அண்ணா பல்கலைக்கழகம் (Anna University), நாடாளுமன்றம் (Parliament), மு. கருணாநிதி (M. Karunanithi) என்று குறியீட்டுச் சொற்களை உள்ளீடு செய்து தேடுவதைப் போல், இந்தத் தேடுபொறியிலும் தேட முடியும். இங்கு தேடப்படும் அனைத்துக் குறியீட்டுச் சொற்களுக்கும் அதனுடன் தொடர்புடைய தகவல் குறிப்புகள் தொகுக்கப்பட்டு நமக்குப் பார்வைக்குக் கிடைக்கின்றன. இதன் மூலம், குறியீட்டுச் சொற்களுடன் தொடர்புடைய சிறு வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. அந்தத் தொகுப்பில் நமக்குத் தேவையான தலைப்பில் சொடுக்கி முழு விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு சில சொற்கள் இரு வேறு செயல்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அதில் முக்கியமானதாகக் கருதும் ஒன்றைப் பற்றிய குறிப்புகளை முதலில் தொகுத்துத் தருகிறது. உதாரணமாக, பைத்தான் (Python) என்பது ஆங்கிலத்தில் உயிரினமான மலைப்பாம்பு மற்றும் கணினி நிரலாக்க மொழிகளில் ஒன்றையும் குறிப்பிடுகிறது என்பது பலருக்கும் தெரியும். இத்தளத்தில் பைத்தான் (Python) என்று ஆங்கிலத்தில் உள்ளீடு செய்து தேடினால் மலைப்பாம்பு குறித்த தகவல் குறிப்புகளைத் தொகுத்துத் தருகிறது. இருப்பினும் மேற்பக்கத்தில் பைத்தான் எனும் பெயரில் ஒரு காட்டு உயிரினம் (Amusement Park Ride), திரைப்படம் (Movie), கணினி நிரலாக்க மொழி (Programming language), சொல் (Word) போன்றவை இருக்கின்றன எனும் குறிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதன் மூலம் நாம் தேவையானதைச் சொடுக்கி, அது குறித்த தகவல் குறிப்புகளை விரைவாகப் பெற முடியும்.
இந்தத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் (Home Page) சில குறிப்புகளின் ஆய்வுகள் (Explore some of things) இத்தளத்தில் செயல்படுத்த முடியும் எனும் தலைப்பின் கீழ் கணிதம் (Mathematics), அறிவியல் & தொழில்நுட்பம் (Science & Technology), சமூகம் மற்றும் பண்பாடு (Society & Culture), அன்றாட வாழ்வு (Everyday Life) என்று நான்கு முதன்மைப் பிரிவுகள் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முதன்மை பிரிவுக்குக்கும் கீழ் அதன் உட்பிரிவுகள் தரப்பட்டுள்ளன.
மேற்காணும் குறிப்பிட்ட தலைப்பில் சொடுக்கி, அத்தலைப்புடன் தொடர்புடைய துறைகளிலான பல்வேறு அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இத்தகவல்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கிறது.
பள்ளிப்படிப்பு படிப்பவர்கள் மட்டுமின்றி, கல்லூரிகள், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கும் இத்தளம் மிகுந்த பயனளிக்கும் தளமாக இருக்கிறது.
இந்தத் தளத்தில் கிடைக்கும் தகவல்கள் கூகுள் தேடல், விக்கிப்பீடியா பக்கங்களில் கிடைக்கும் தகவல்களை விட மிகவும் நம்பகமானது என்பதால் இத்தளம் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் தளமாகவே இருக்கிறது.
இந்தத்தளத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக் கொண்டால், மாணவர்களுக்கு இந்தத் தளம் பல்வேறு அரிய தகவல்களை அறிந்து கொள்ளக் கூடிய சிறப்பான தளமாக இருக்கும், இந்தத் தளத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த விவரங்கள் இத்தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே இடம் பெற்றிருக்கின்றன. இதன் மூலம் இத்தளத்தினைப் பயன்படுத்தும் வழிமுறையினை விரைவில் கற்றுக் கொள்ள முடியும்.
இந்தத் தளத்தைப் பயன்படுத்திப் பார்க்க விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் http://www.wolframalpha.com/ எனும் இணைய முகவரிக்குச் சென்று உங்கள் தேடல்களைத் தொடங்கலாம்.
Thank you – Kalki