கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
																																		கொழும்பில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் மீளாய்வுக் கூட்டத்தில் அவர் குறித்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
அதன்படி இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்தில் கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் அரச நிறுவனங்கள், மதத் தலங்கள், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் போன்றவற்றில் டெங்கு நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
        



                        
                            
