நியூ கலிடோனியா கலவரம்: சுற்றுலாப்பயணிகளை வெளியேற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவில் குறைந்தது 6 பேரை பலிவாங்கிய கலவரம் மூண்டதைத் தொடர்ந்து பிரான்ஸைச் சேர்ந்த சுமார் 1,000 காவல்துறை அதிகாரிகள் அவ்வட்டாரத்தைச் சென்றடைந்துள்ளனர்.
அங்குள்ள பிரெஞ்சு தூதரகம் திங்கட்கிழமையன்று (மே 20) இதனைத் தெரிவித்தது. சாலைகளில் கலவரம் தணிந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
எனினும், நியூ கலிடோனியாவில் சிக்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளை மீட்பதற்கான விமானங்களை ஆஸ்திரேலியா, நயூசிலாந்து ஆகிய நாடுகளால் அனுப்ப முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிரெஞ்சு ஆட்சியில் உள்ள நியூ கலிடோனியாவில் நிலவரம் மிகவும் கவலை தரும் வண்ணம் இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிஸ் கூறினார். சாலைகளுக்கு ஏற்பட்ட சேதம், சாலைகளில் போடப்பட்ட தடுப்புகள் ஆகியவற்றால் விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
தலைநகர் நூமியெவில் தொடங்கி அவ்வட்டாரத்தின் அனைத்துலக விமான நிலையம் வரையிலான பாதையை மீண்டும் தங்கள்வசம் கொண்டுவர பல நாள்களாகலாம் என்று நியூ கலிடோனியாவின் ஆக உயரிய பதவியில் இருக்கும் பிரெஞ்சு அதிகாரி லூயி லெ ஃபிராங்க் ஞாயிற்றுக்கிழமை (மே 19) மாலை குறிப்பிட்டார். ‘கென்டார்மெஸ்’ என்றழைக்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகள் 76 சாலைத் தடுப்புகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
சென்ற வாரம் மூண்ட கலவரத்தால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் நியூ கலிடோனியாவிலிருந்து வெளியேறவும் அங்கு செல்லவும் முடியாமல் கிட்டத்தட்ட 3,200 சிக்கியிருப்பதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்தது.