உலகை ஆட்டங்காண வைத்த ஈரானின் முன்னாள் ஜனாதிபதி – யார் இந்த இப்ராஹிம் ரைசி?
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஒரு கடுமையான மத பற்றுக் கொண்டவராகும். அவர் ஈரானின் உச்ச தலைவராகக் கருதப்படும் அயதுல்லா அலி கமேனிக்கு மிகவும் விசுவாசமான நபராக அறியப்படுகிறார்.
ரைசி 2021 ஆம் ஆண்டு ஈரானின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன் பின்னர் ஈரானின் ஒவ்வொரு பகுதியையும் கடும்போக்காளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 63 ஆகும். ரைசி நாட்டின் நீதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அப்போது ஜனாதிபதியாக இருந்த ஹசன் ரௌஹானியை தோற்கடித்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.
ஆனால் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். குறிப்பாக தாராளவாத மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி குரல் கொடுத்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை மற்றும் பல வாக்காளர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகினர்.
அவர் ஈரானில் ஆட்சியைப் பிடித்தபோது, அந்நாடு பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்தது. குறிப்பாக பொருளாதார பிரச்சனைகள், பிராந்திய அச்சுறுத்தல்கள் மற்றும் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முறிவு ஆகியவை அவற்றில் பிரதானமானவை.
அவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஈரான் முழுவதும் பரவின. அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தப் போராட்டங்களை ஒடுக்க அவர் உழைத்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல்களில், ஈரானின் ஆதரவு இஸ்ரேலுக்கு எதிரான பிரிவுகளுக்கே வருகிறது. மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் முக்கிய ஆதரவாளராக ஈரான் உள்ளது, இது உலக கடற்படைக்கு தலைவலியாக மாறியுள்ளது.
ரைசி அந்த நிலையை மேலும் உயர்த்தினார். எனவே, மேற்கத்திய உலகம் அவரை அதிகம் விரும்பவில்லை.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான நிழல் யுத்தம் அவரது ஆட்சிக் காலத்தில் வெளிப்பட்டது.
பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ரைசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 1980ஆம் ஆண்டு களில் அரசியல் கைதிகளை தூக்கிலிடும் “சிறப்புக் குழுவில்” உறுப்பினராகச் செயல்பட்டார்.