ஜூன் மாதத்தில் உலக நாடுகளில் தாக்குதல் அபாயம் – அமெரிக்கா அவசர எச்சரிக்கை
ஜூன் மாதத்தில் உலகம் முழுவதும் ஓரினச்சேர்க்கையாளர்களை கொண்டாடும் போது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கொண்டாட்டங்களின் போது சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் குறித்தும் கவனமாக இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.
எனினும் குறித்த எச்சரிக்கைகளில் குறிப்பிட்ட கூட்டங்கள் அல்லது இடங்கள் குறிப்பிடப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பெருமைக்குரிய மாதம் என அழைக்கப்படும் ஜூன் மாதமே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
துப்பாக்கிச்சூடு நடத்தியது ஐ.எஸ்.ஐ.எஸ் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 53 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு, ஒஸ்ரியாவின் வியன்னாவில் ஓரின சேர்க்கையாளர் அணிவகுப்பில் தாக்குதல் நடத்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த தாக்குதல் நடத்தியவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக 145 வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் சமீபத்தில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.