பால்டிமோர் பாலத்தில் மோதிய கப்பல்; 7 வாரங்களாக சிக்கி தவிக்கும் 20 இந்தியர்கள் மற்றும் இலங்கையர்

கடந்த மார்ச் 26ஆம் திகதி அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின்மீது மோதிய ‘டாலி’ சரக்குக் கப்பல் ஊழியர்களான 20 இந்தியர்களும் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் இன்னும் அதனுள்ளேயே உள்ளனர்.
சிங்கப்பூர்க் கொடியுடன் கூடிய டாலி கப்பல்மீது சாய்ந்திருந்த பாலத்தின் ஒரு பகுதி, இவ்வாரம் திங்கட்கிழமை (மே 13) கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பின் மூலம் அகற்றப்பட்டது.அச்சம்பவத்தின்போதும் அந்த 21 ஊழியர்களும் கப்பலிலேயே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விசா கட்டுப்பாடுகளாலும் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் மற்றும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளாலும் அவர்கள் கப்பலைவிட்டு வெளியேற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
ஏழு வாரங்களாகக் கப்பலைவிட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர.
விசாரணையின் ஒரு பகுதியாக, அவர்களின் கைப்பேசிகளை FBI பறித்துக்கொண்டதால் கடந்த சில வாரங்களாக அவர்கள் வெளியுலகத் தொடர்பின்றி இருப்பதாக பால்டிமோர் அனைத்துலகக் கடலோடிகள் மையத்தின் நிர்வாக இயக்குநர் ஜோஷுவா மெஸ்ஸிக் கூறினார்.
“அவர்களால் இணையவழி பணப் பரிமாற்றம் எதையும் செய்ய முடியவில்லை. வீட்டுச் செலவுகளுக்கான கட்டணம் செலுத்த முடியவில்லை. மற்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கான எந்த விவரமும் அவர்களிடம் இல்லை. அதனால், உண்மையிலேயே இப்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இப்போது அவர்களுக்கு sim அட்டைகளும் தற்காலிகக் கைப்பேசிகளும் தரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த 289 மீட்டர் நீளமுடைய கொள்கலன் கப்பல், 27 நாள் பயணமாக பால்டிமோரிலிருந்து இலங்கை கிளம்பிய நிலையில், தொடக்கத்திலேயே விபத்தில் சிக்கிக்கொண்டது.பாலத்தின்மீது மோதுவதற்குச் சில நொடிகள் முன்பு அக்கப்பலில் மின்தடை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.