பிரித்தானியாவில் எடை இழப்புக்காக பரிந்துரைக்கப்படும் மருந்தால் மாரடைப்பை கட்டுப்படுத்த முடியும்!
பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு எடை இழப்புக்கான ஜப்ஸ் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று இதய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற குறைப்பாடுகளை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இருதய நோய் ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணிகளில் ஒன்றாக எடை அதிகரிப்பு காணப்படுகிறது.
பிரித்தானியாவின் உயர் மட்ட இருதய நோய் நிபுணர், 1990 களில் ஸ்டேடின்களுக்குப் பிறகு இதய நோயில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் Ozempic மற்றும் Wegovy ஆகிய மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது 20 வீதம் குறைந்துள்ளதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
ஐரோப்பிய உடல் பருமன் காங்கிரஸில் (ECO) சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில், ஆரம்ப எடை அல்லது அவர்கள் இழந்த எடையின் அளவைப் பொருட்படுத்தாமல்,செமகுளுடைட் எடுத்துக்கொண்டவர்களின் இருதய நலன் சீராக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கார்டியோவாஸ்குலர் அவுட்கம்ஸ் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான பேராசிரியர் ஜான் டீன்ஃபீல்ட், இந்த கண்டுபிடிப்புகள் இருதய நோய்களுக்கு சிகிச்சையளிக்க வழக்கமாக பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இதை எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்த அவர், இந்த அருமையான மருந்து உண்மையில் ஒரு கேம்சேஞ்சர் என்று விவரித்துள்ளார்.
இந்த மருந்தை பரிசோதிப்பதற்கான ஆய்வில் ஏறக்குறைய 41 நாடுகளில் இருந்து 27 -45 வயதுக்கு இடைப்பட்ட 17 ஆயிரத்து 604 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
பங்கேற்பாளர்களுக்கு முன்பு மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் இருந்ததாகவும், ஆய்வுக்கு பின் அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்றாக உணர்வதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெகோவி என்ற பிராண்ட் பெயரில் Semaglutide 2023 முதல் NHS இல் எடை இழப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
உடல் பருமன் பற்றிய ஆய்வுக்கான ஐரோப்பிய சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஜேசன் ஹால்ஃபோர்ட், இந்த மருந்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதைக் காண முடியும் என்பதால், அது பரவலாக பரிந்துரைக்கப்படுவது பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் என்று கூறினார்.
அடுத்த 10 ஆண்டுகளில் சுகாதாரத்திற்கான அணுகுமுறையில் ஒரு தீவிரமான மாற்றத்தைக் காண்போம் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.