பொருளாதர மந்தநிலை : நியூசிலாந்திலிருந்து வேலைவாய்ப்பு தேடி அதிகளவில் வெளியேறும் மக்கள்
நியூசிலாந்தில் பொருளாதார மந்தநிலை காரணமாக வேலை வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன.இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவில் அந்நாட்டு மக்கள் பலர் அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
மார்ச் மாதம் நிலவரப்படி நியூசிலாந்துக் குடிமக்கள் 78,200 பேர் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்ததாக நியூசிலாந்துப் புள்ளிவிவரத்துறை மே 14ஆம் திகதியன்று தெரிவித்தது.பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 74,900ஆக இருந்தது.
நியூசிலாந்திலிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வோர் எண்ணிக்கை முதல்முறையாக 50,000க்கும் அதிகமாகப் பதிவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
உயர் வட்டி விகிதங்களால் பயனீட்டாளர்கள் முன்பு போல அதிகம் செலவு செய்வதில்லை. அதுமட்டுமல்லாது, வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வேலைக்கு ஆள்சேர்ப்பதும் குறைந்துள்ளது.இதன் விளைவாக வேலை கிடைக்காமல் தவிக்கும் நியூசிலாந்து நாட்டினர் பலர் ஆஸ்திரேலியாவுக்கும் மற்ற நாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.
நியூசிலாந்தில் வழங்கப்படும் சம்பளத்தைவிட வெளிநாடுகளில் அவர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, நியூசிலாந்து மக்களை ஈர்க்க ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையும் காவல்துறையும் அவர்களுக்கு உயர் சம்பளம் மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன.
நியூசிலாந்திலிருந்து வெளியேறும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் வேளையில், அங்கு இடம்பெயரும் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி 139,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்தனர்.ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது.
நியூசிலாந்துக்கு இடம்பெயரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்து மாதங்களாகச் சரிந்துள்ளது. 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி அது 111,145ஆகப் பதிவானது.