ஓய்வூதியம் பெறுவதற்காக தந்தையின் உடலை மறைத்து வைத்த தாய்வான் பெண்!
தைவான்: தைவான் பெண் ஒருவர் மாத ஓய்வூதியம் பெறுவதற்காக தந்தையின் உடலை மறைத்து வைத்துள்ளார். தந்தையின் இராணுவ ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக பல வருடங்களாக சடலம் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த யுவதி தனது தந்தையின் சடலத்துடன் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பரில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதார அதிகாரிகள் வீட்டிற்கு வந்தபோது, பெண் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதற்காக அவர் மீது சுமார் 1.50 லட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகளை வீட்டுக்குள் நுழைய விடாமல் தொடர்ந்து அனுமதி மறுப்பது கவலையை எழுப்பி காவல்துறையினரின் தலையீட்டிற்கு வழிவகுத்தது.
அவரது தந்தையின் இருப்பிடம் குறித்து அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் முதியோர் இல்லத்தில் இருப்பதாக முதலில் கூறினார்.
அந்த பெண் மீண்டும் தனது தந்தை இறந்துவிட்டதாகவும், இறப்புச் சான்றிதழைத் தர முடியவில்லை என்றும் கூறினார்.
அப்போது அவர்களது வீட்டில் சோதனை செய்த பொலிசார், ஒரு முதியவரின் எலும்புகள் அடங்கிய கருப்பு பிளாஸ்டிக் பையை கண்டுபிடித்தனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் இறந்து நீண்ட நாட்களாகியிருப்பது தெரியவந்தது.
ஒரு உடல் எலும்புக்கூடாக சிதைக்க பொதுவாக ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்று தடயவியல் நிபுணர்கள் விளக்கினர்.
அந்த பெண்ணின் தந்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் பணியாற்றியவர்.
அவரது பதவி மற்றும் சேவை வரலாற்றின் படி, அவர் சுமார் 1.27 லட்சம் ரூபாய் மாத ஓய்வூதியத்தைப் பெறுகிறார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
உடலை மறைத்தது தவிர, வேறு கடுமையான குற்றங்களை அந்த பெண் செய்தாரா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்.
தைவான் சட்டத்தின்படி, சடலத்தை அழித்தல், கைவிடுதல், இழிவுபடுத்துதல் அல்லது திருடுதல் ஆகியவற்றுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.
நேரடி உறவினர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர் இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டால், தண்டனை 1.5 மடங்கு அதிகரிக்கப்படுகிறது. அந்த பெண் தற்போது பொலிஸ் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.