தோற்றத்தில் பெண்,உள்ளுக்குள் ஆண்… திருமணத்திற்கு தயாரான சீன பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மத்திய சீனாவின் குபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி யுவன். தன்னுடைய 27 ஆவது வயதில் லி யுவனின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ச்சிகரமாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. 27 வயது வரை பெண்ணாக வளர்ந்து வந்த லி யுவன் ஒரே சோதனையில் தான் பெண் அல்ல ஆண் குரோமோசோம்களை கொண்டவர் என்பதை தெரிந்து கொண்டதும் திகைத்துப்போய் உள்ளார். அதுவும், திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய தயாரான நேரத்தில் அவருடைய வாழ்க்கையில் இப்படியொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
லி யுவன் பிறந்ததில் இருந்து பெண்ணின் தோற்றத்தில் இருந்துள்ளார். வளர் இளம் பருவத்தில் அவருக்கும் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. ஆனால், வளர வளர அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவருக்கு பெண்களுக்கே உரித்தான மார்பகங்கள் வளரவில்லை. அதேபோல், மாதவிடாய் சுழற்சியும் உருவாகவில்லை. இதெல்லாம் அவருக்கு மனரீதியில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
தன்னுடைய 18 ஆவது வயதில் லி வீட்டின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஹர்மோன் அளவு வித்தியாசமாக இருப்பதையும், கருப்பை செயலிழப்பு நிலையில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே குரோமோசோம் சோதனையை மேற்கொள்ளுமாறு லி-க்கு மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால், லி யுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவரின் அறிவுரையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
10 ஆண்டுகள் கழித்து தன்னுடைய 27 வயதில் திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் லி யுவன். ஆனால், அவரது மனதை தன்னுடைய உடல் குறித்த எண்ணம் உருத்தியதால் அந்த சோதனையை செய்துவிடுவது நல்லது என்ற எண்ணத்திற்கு வந்தார்.
மூத்த மகப்பேறு மருத்துவர் டூயன் ஜியி என்பவரிடம் பரிசோதனைக்கு சென்றுள்ளார் லி யுவன். அவர் லி-க்கு குரோமோசோம் சோதனையை செய்துள்ளார். முதல் பரிசோதனையில் லி-க்கு ஒரு அரிய உடல் கோளாறு, பிறவி அட்ரீனல் ஹைப்பர் பிளேசியா இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், சோதனையின் இறுதி முடிவுக்காக ஒரு மாதம் வரை லி காத்திருக்க வேண்டியிருந்தது.
ஒரு மாதம் கழித்து வந்த சோதனை முடிவு மருத்துவரின் கணிப்பை உறுதி செய்தது. லி பெண்ணாக தோற்றம் அளித்தாலும் அவருக்கு ஆணின் குரோமொசோம்கள் இருந்துள்ளது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் இந்த முடிவை தெரிவித்ததும் லி அதிர்ச்சி அடைந்துள்ளார். 27 வருடங்களாக ஒரு பெண்ணாகவே வாழ்ந்துவந்த அவருக்கு இந்த முடிவை ஏற்க முடியவில்லை. மிகுந்த சிரமப்பட்டுள்ளார். ‘congenital adrenal hyperplasia’ எனப்படும் இந்த சிக்கல் 50 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு தான் ஏற்பட வாய்ப்புள்ளது.
லியின் பெற்றோர் இருவருக்குமே இதுபோன்ற ஜீன் கோளாறு இருந்துள்ளதால் அவருக்கு நான்கில் ஒரு பங்கு வாய்ப்பு இருந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே சிகிச்சை ஏதும் எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்ததால், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வைட்டமின் டி குறைபாடால் லி கடுமையாக சிரமத்தை சந்தித்துள்ளார். அத்துடன், லியின் அடிவயிற்றில் மறைந்துள்ள விதைப்பையை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றுமாறு மருத்துவர் பரிந்துரைத்தார். ஏனெனில் இது புற்றுநோய்க்கான அதிக ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மூலம் விதைப்பையை அகற்றியுள்ளனர்.
தற்போது, லி-க்கு தொடர்ச்சியான சோதனைகளும், நீண்ட காலத்திற்கு ஹார்மோன் தெரப்பியும் செய்ய வேண்டியுள்ளது.