IPL Match 57 – அதிரடியாக விளையாடி 9.4 ஓவரில் போட்டியை முடித்த ஐதராபாத்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 66 ரன்னில் 4 விக்கெட்டை திணறிய லக்னோ அணிக்கு பதோனி மற்றும் பூரன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி அரை சதம் அடித்து அசத்தினார். பதோனி 55 ரன்களிலும் பூரன் 48 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.
ருத்ரதாண்டவம் ஆடிய டிராவிஸ் ஹெட் 16 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். அவரை தொடர்ந்து அபிஷேக் சர்மா அரை சதம் அடித்தார்.
அபிஷேக் சர்மா 75 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 89 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.