இலங்கையின் இறப்பு விகிதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சமீபத்திய பதிவின்படி, 2020 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களுக்கு இடையில் ஒரு ஏற்றத்தாழ்வு பதிவாகியுள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம், சட்டத்தரணி லக்ஷிகா கணேபொல, வருடாந்த பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வருடாந்த இறப்பு வீதம் 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்த பிறப்பு வீதம் சுமார் 325,000 ஆக இருந்ததாகக் கூறிய கணேபொல, கடந்த மூன்று வருடங்களில் அது 280,000 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 140,000 ஆக இருந்த வருடாந்த இறப்பு விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் 180,000 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சமீபத்திய பதிவின்படி, , வருடாந்த பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களுக்கிடையில் உள்ள ஏற்றத்தாழ்வு இலங்கையின் சனத்தொகையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கை இலங்கையின் சனத்தொகையில் 0.6% வீழ்ச்சியையும், 2022 இல் 22.2 மில்லியனிலிருந்து 2023 இல் 22 மில்லியனாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, 2007 இல் 1.93% ஆக இருந்த ஆண்டு பிறப்பு விகிதம் 2023 இல் 1.12% ஆகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் 2007 இல் 0.59% ஆக இருந்த ஆண்டு இறப்பு விகிதம் 2023 இல் 0.82% ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையின் வருடாந்த பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு இருப்பதையும் CBSL அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இலங்கையின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களுக்கிடையில் உள்ள ஏற்றத்தாழ்வை சமீபத்தில் எடுத்துக்காட்டியதுடன், இளையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில, ஏற்றத்தாழ்வுகளின் தாக்கங்களை தடுக்க இளைய தலைமுறையினரை தக்கவைக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிர்காலத்தில் இளைய குடிமக்களை விட மூத்த பிரஜைகளின் நிலைமையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.