அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்படும் சாத்தியம்
வாகன இறக்குமதிக்கான தடையை அடுத்த வருட ஆரம்பத்தில் நீக்குவதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு திறைசேரிஅதிகாரிகளைக் கொண்ட குழு எதிர்வரும் வாரத்தில் முன்வைக்கத் தயாராகும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருந்தால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடை நீக்கப்படும் என அந்த மூத்த அதிகாரி தெரிவித்தார்.
வாகன இறக்குமதி தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக, குழுவின் பரிந்துரை நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வாகன இறக்குமதிக்கான தடையை அரசாங்கம் நீக்காவிட்டால், சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள வருவாய் இலக்குகளை அடையத் தவறிவிடும் என்றும், எனவே இறக்குமதி மீதான தடையை நீக்க குழு முடிவு செய்ததாகவும் மூத்த அதிகாரி கூறினார்.
அமெரிக்க டொலரின் பெறுமதியை நீண்ட காலத்திற்கு கட்டுப்படுத்த முடியாது என்பதால் இறக்குமதி தடையை நீக்குவது முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் மாடல்கள் மற்றும் அந்த வாகனங்களின் உற்பத்தி ஆண்டுகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.