மாலதீவு நாடாளுமன்ற தேர்தல் ;அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார் முகம்மது முய்சு…
மாலத்தீவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் தற்போது அதிபராக முகமது மொய்சு பதவியில் உள்ளார். அவருக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்கு நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 368 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.
இந்த தேர்தல் அதிபர் முகமது முய்சுக்கு முக்கியமானதாக கருதப்பட்டது. சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் தேர்தலில் மக்கள் வேறு மாதிரியான முடிவை தந்துள்ளனர். நேற்று நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணியும் உடனடியாக நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை முறியடித்து முகமது முய்சு கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதிலும் அறுதிப் பெரும்பான்மையுடன் அவருக்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர். மொத்தமுள்ள 93 தொகுதிகளில் இதுவரை 86 தொகுதிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 66 தொகுதிகள் முகம்மது மொய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. அதனால் அவரது கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சிக்கு 10 இடங்களே கிடைத்துள்ளது.