ஜப்பான் – நேருக்கு நேர் மோதி கடலுக்குள் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்கள்: மாயமான 7 பேர்
ஜப்பானில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பசுபிக் பெருங்கடல் பகுதியில் சீனாவின் தொடர் அத்துமீறல்கள் காரணமாக, ஜப்பான் தனது கடலோர பாதுகாப்பை அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தொடர் பயிற்சிகளில் அந்நாட்டு ராணுவம் மற்றும் கடற்படை ஈடுபட்டு வருகிறது. நேற்று இரவு நாகசாகி கடற்படை தளத்திலிருந்து வந்த ஹெலிகாப்டரும், டொகுஷிமா கடற்கரை தளத்திலிருந்து வந்த ஹெலிகாப்டர் ஒன்றும் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
நீர்மூழ்கி கப்பல்களைக் கண்டறியும் குழுவைச் சேர்ந்த இந்த நவீன ரக ஹெலிகாப்டர்களில், 8 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்நாட்டு நேரப்படி இரவு 10:38 மணியளவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் உடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக மீட்புப் படையினர் கடற்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஹெலிகாப்டரின் பாகங்கள் மட்டும் கடலில் மிதந்தது தெரியவந்தது.
இதனால் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என ராணுவத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 7 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் 7 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை 8 ஆக உயரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.