வடகொரியாவிற்கு எதிராக கூட்டு சேரும் மூன்று நாடுகள்! அமெரிக்கா வழங்கிய உறுதிமொழி!
பல தசாப்தங்களுக்கு முன்னர் வடகொரியாவால் கடத்தப்பட்ட அனைத்து ஜப்பானியர்களும் தங்கள் வலிமிகுந்த பிரிவினையை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் வரை அமெரிக்கா ஜப்பானுடன் நிற்கும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க தூதுவர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் இன்று (18.04) டோக்கியோவிற்கு தனது பயணத்தைத் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு, கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்போதே மேற்படி கூறியுள்ளார்.
1970கள் மற்றும் 1980களில் அவர்களுக்கு ஏஜெண்டுகளாக பயிற்சி அளிப்பதற்காக வடகொரியா குறைந்தது 17 ஜப்பானிய குடிமக்களைக் கடத்திச் சென்றதாக ஜப்பான் கூறுகிறது.
2002 இல் 13 ஜப்பானியர்களைக் கடத்திச் சென்றதை ஒப்புக்கொண்ட பிறகு, வட கொரியா மன்னிப்புக் கேட்டது மற்றும் ஐந்து பேரை வீட்டிற்கு திரும்ப அனுமதித்தது.
மேலும் எட்டு பேர் இறந்துவிட்டதாகவும், மற்ற நான்கு பேர் தனது எல்லைக்குள் நுழைந்ததை மறுத்துள்ளதாகவும் பியோங்யாங் தெரிவித்துள்ளது.
இன்னும் காணாமல் போன பன்னிரண்டு பேரில் டீனேஜ் மாணவர்களும் ஜப்பானின் கடற்கரையோரங்களில் வசிக்கும் மற்றவர்களும் அடங்குவர். அவர்களில் பலர் சிறிய படகுகளில் கட்டப்பட்டு கடல் வழியாக வடகொரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடத்தப்பட்டவர்களை மீட்டெடுப்பதற்காக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுடன் உச்சிமாநாட்டை நடத்துவதற்கான தனது உறுதியை ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா பலமுறை தெரிவித்தார். இருப்பினும் பயனில்லை.
இதேவேளை வட கொரியா மற்றும் சீனாவிலிருந்து பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்தி வருகின்றன.
மூன்று நாடுகளும் தங்களின் ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சிகளையும், அமெரிக்க மூலோபாய சொத்துக்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட தடுப்பு உத்திகளையும் விரிவுபடுத்தியுள்ளன.