மக்கள் நலம் காக்கும் செயற்கை நுண்ணறிவு
மனோஜுக்குத் திடீரென்று தலைவலி, ஏதோ ஒரு தைலத்தைத் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். ஆனால், தலைவலி கொஞ்சமும் குறையவில்லை.
அதனால், அவர் தன்னுடைய செல்ஃபோனை எடுத்து ஒரு செயலியைத் திறந்தார், அங்கு ஒரு பொத்தானை அழுத்திப் பேசினார், தன்னுடைய சிக்கலை விரிவாக விளக்கினார்.
மறு விநாடி, அவருடைய குடும்ப மருத்துவரின் குரல் கேட்டது, ‘மனோஜ், நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு வழக்கமான தலைவலி என்றுதான் தோன்றுகிறது. செல்பேசி, கணினி, தொலைக்காட்சித் திரையைப் பார்க்காமல் இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள். அப்போதும் வலி குறையாவிட்டால் நம் மருத்துவமனைக்கு நேரில் வாருங்கள்.’
இங்கு ரகசியம் என்னவென்றால், மனோஜின் குடும்ப மருத்துவர் இப்போது வேறு யாருக்கோ ஒரு பெரிய அறுவைச் சிகிச்சையைச் செய்துகொண்டிருக்கிறார். தன்னுடைய தலைவலியைப்பற்றி மனோஜ் பேசியதை அவர் கேட்கவுமில்லை, மேற்கண்ட அறிவுரையைச் சொல்லவுமில்லை. ஆனாலும் மனோஜுக்குத் தேவையான முதற்கட்ட மருத்துவக் குறிப்புகள் கிடைத்துவிட்டன.
எப்படி? இது செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் மாயம்.
அதாவது, சற்றுமுன் மனோஜ் தன்னுடைய செல்பேசியில் பேசியபோது, மறுமுனையில் மருத்துவர் யாரும் இல்லை. ஒரு மென்பொருள் அவருடைய பேச்சைக் கேட்கிறது, அதை எழுத்தாக மாற்றுகிறது, அதிலிருந்து முதன்மையான சொற்களைப் பிரித்தெடுக்கிறது, அந்தச் சொற்களைத் தன்னுடைய மருத்துவத் தரவுத்தளத்தில் (Database) தேடுகிறது, இதற்குமுன் தன்னிடம் பேசிய நோயாளிகள் சொன்ன சிக்கல்கள், அதற்குத் தான் கொடுத்த பதில்கள், அதன் வெற்றி, தோல்வி ஆகியவற்றை ஆராய்கிறது, மனோஜின் தனிப்பட்ட மருத்துவக் குறிப்புகளையும் பார்க்கிறது, இதன் அடிப்படையில் அவருக்கு எப்படி உதவலாம் என்று தீர்மானிக்கிறது, அதை மனோஜின் குடும்ப மருத்துவருடைய குரலில் ஒலியாக மாற்றி அவருக்குக் கொடுக்கிறது.
மேலுள்ள எதுவும் கதையில்லை. இன்றைய தொழில்நுட்பத்தில் இவை அனைத்தையும் செய்யலாம், அதற்குமேலும் செய்யலாம். உலகெங்கும் பல மருத்துவ அமைப்புகள் இதைச் செய்யத்தொடங்கிவிட்டன.
Thank you – Kalki