மோடி வெற்றிபெற கைவிரலை அறுத்து ரத்தத்தால் காளிக்கு அபிஷேகம் செய்த தொண்டர்!
பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக வேண்டும் என தன் கை விரலை அறுத்து, காளிக்கு ரத்த காணிக்கை செலுத்தியுள்ள நபரின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
கர்நாடகாவின் உத்தர கன்னடா, கார்வாரின் சோனாரவாடா கிராமத்தை சேர்ந்தவர் அருண் வர்னேகர், 35. சண்டை பயிற்சியாளராக பணியாற்றும் இவர் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசி.அதன் காரணமாக தன் வீட்டில் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்கிறார். வீட்டின் அறைகளில் தேசிய தலைவர்களின் படத்தை ஒட்டியுள்ளார்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது மோடி பிரதமராக வேண்டும் என, பிரார்த்தனை செய்து தன் கை விரலை அறுத்து காளிக்கு ரத்தத்தை காணிக்கை செலுத்தினார். சாமி படங்களுக்கு ரத்தப் பொட்டு வைத்தார். அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆனார்.
அதேபோல 2019 மக்களவைத் தேர்தலின்போதும் தனது கைவிரலை அடுத்து காளிக்கு இரத்தத்தால் அபிஷேகம் செய்தார். மோடி பிரதமராக வேண்டும் என்று ரத்தத்தால் எழுதினார். அந்த முறையும் மோடி பிரதமர் ஆனார். அதனால் இம்முறையும், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என, பிரார்த்தனை செய்த அருண் வர்னேகர், நேற்று தன் இடது கை விரலை அறுத்து, காளிக்கு ரத்தத்தை அர்ப்பணம் செய்தார்.
தன் ரத்தத்தால் மோடிக்காக கட்டப்பட்டுள்ள கோயில் சுவரில் ‘மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், 378 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று மோடி கோயிலில் சுவரில் எழுதியுள்ளார். இவரது இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.