அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் சந்தேக மரணங்கள் ; மேலும் ஒருவர் பலி!
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் சந்தேக மரணங்கள் அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2024ம் ஆண்டில் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 10 இந்திய வம்சாவளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் இந்திய வம்சாவளி மாணவர் உமா சத்ய சாய் காடே முதுகலை படித்து வந்தார். இவர் நேற்று ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது சடலத்தை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த மாணவரின் உடலை, இந்தியாவுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் படிக்கும் இந்திய வம்சாவளி மாணவர்களின் மீதான தாக்குதலின் தொடர்ச்சி தான், மாணவர் உமா சத்யகாடேவின் மரணம் என்று அங்குள்ள மாணவர்கள் கூறியுள்ளனர். கடந்த மாதம் கிளீவ்லேண்டில் இருந்து மற்றொரு இந்திய மாணவர் முகமது அப்துல் அராபத் கிளீவ்லேண்ட் பகுதியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹைதராபாத் மாணவர் சையத் மசாஹிர் அலி சிகாகோவில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். பின்னர், சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக தலையிட்டு அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உதவி செய்தது.
2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.