ரஷ்ய இராணுவத்தில் இலங்கை முப்படையினர்? பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
ரஷ்ய இராணுவத்தில் சேர வேண்டாம் என இலங்கை முப்படையைச் சேர்ந்த அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் இந்நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இணைவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக அல்ஜசீரா செய்திச் சேவை வெளியிட்ட தகவலுடன், அது தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது.
எனினும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தூதரகங்கள் ஊடாக நாட்டுக்கு அறிவிக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரை ரஷ்யாவிற்கு அனுப்புவதற்கு இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் உடன்பாடு ஏற்படாத பின்னணியில், இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்ள வேண்டாம் என இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைன் இராணுவத்தில் கடமையாற்றும் போது இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் தகவல் வெளியாகியிருந்தது.