விசா நிபந்தனைகளை மீறி நுவரெலியாவில் வேலை செய்த இரு இந்தியர்கள் கைது!
வேலை விசா நிபந்தனைகளை மீறி நுவரெலியாவில் உள்ள உணவகங்களில் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று இந்திய பிரஜைகள் நேற்று (29.03) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நுவரெலியாவில் உள்ள இரண்டு உணவகங்களில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பிரஜைகளுக்கு நுவரெலியாவில் உள்ள குறிப்பிட்ட உணவகம் ஒன்றில் பணிபுரிய வேலைவாய்ப்பு விசா வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வேறு இடத்தில் பணிபுரிவதாகவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
வழக்கமாக இந்த வகையான பணி அனுமதிகள் தனிநபருக்கு வழங்கப்படுவதில்லை, ஆனால் வேலை செய்யும் இடத்திற்கு வழங்கப்படுகிறது. வெளிநாட்டவர் குறிப்பிட்ட பணியிடத்தில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்றும் அதிகாரி கூறினார்.
ஒருவர் இனி அங்கு வேலை செய்ய விரும்பவில்லை என்றால் அவரது பணி விசா ரத்து செய்யப்படும், என்றார்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து அனுப்பப்படுவதற்கு முன்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு வெலிசரவில் உள்ள திணைக்களத்தின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.