மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள்- ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!
பெற்றோரின் அசமந்த போக்கு மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அதீத சுதந்திரம் காரணமாக இளம்வயதிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் இந்த நாட்டில் அதிகரித்துவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் இம்முறை சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று இரவு பெரியகல்லாறு மயான வீதியில் குறித்த இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாது மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸாதர் தெரிவித்தனர்.
இதில் பெரியகல்லாறு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த சந்திரகாந்தன் சதுஸன் என்னும் 16வயது மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு மாணவர் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு மாணவர்களும் இம்முறை சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.