மோசடி அழைப்புகளை தானாகத் துண்டிக்கும் ‘மேக்ஸ்’!
ஸ்பேம் அழைப்புகளிலிருந்து பயனர்களை பாதுகாப்பும் ஏற்பாட்டில் ’மேக்ஸ்’ என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மேம்பட்ட தடுப்பு முறையினை ட்ரூ காலர் புதிதாக வழங்குகிறது.
ட்ரூ காலர் என்பது, அழைப்பவர் குறித்தான அடையாளங்களை பயனருக்கு தெரிவிப்பதன் மூலம் வரவேற்பு பெற்றுள்ள செயலியாகும். இந்த வகையில் ஸ்மார்ட் போன்களின் தவிர்க்க இயலாத செயலிகளில் ஒன்றாக ட்ரூ காலர் விளங்கி வருகிறது.
ட்ரூ காலரின் கட்டண அடிப்படையிலான சேவையில், ஸ்பேம் அழைப்புகளை தானாகத் தடை செய்யும் அப்டேட் ஒன்றினை புதிதாக வழங்குகிறது. ஸ்பேம் எனப்படும் வணிக அடிப்படையிலான அநாவசிய அழைப்புகள் செல்போன் வைத்திருப்பவர்களை சதா தொந்தரவில் ஆழ்த்துபவை. குறிப்பாக விளம்பர நிறுவனங்கள், காப்பீடு, முதலீடு உள்ளிட்ட வணிக நோக்கத்திலான அநாவசிய அழைப்புகளை திரையில் அடையாளம் கண்டு அவற்றை நிராகரிக்க ட்ரூ காலர் உதவுகிறது.
மேக்ஸ் எனப்படும் ட்ரூ காலரின் புதிய வசதி மூலம், இந்த ஸ்பேம் அழைப்புகள் அடையாளம் காட்டப்படுவதுடன், அவற்றை தானாக தடை செய்யவும் வாய்ப்பாகும். அதாவது பயனரை தொந்தரவு செய்யாது, ஸ்பேம் அழைப்புகளை ட்ரூ காலரே துண்டிக்கவும் செய்து விடும். செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இந்த மேக்ஸ் செயல்பாடு அமையும் என்பதால், ஸ்பேம் அழைப்புகளை கண்டறிவதில் இதுவரையில்லாத நுட்பத்துக்கு வாய்ப்பாகிறது.
ஆனால், இதில் வாடிக்கையாளர் விரும்பும் அத்தியாவசிய அழைப்புகள் சிலதும் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக ட்ரூ காலர் தெரிவிக்கிறது. இந்த மேக்ஸ் வசதியை, கட்டண அடிப்படையிலான சந்தாதாரர்களுக்கு மட்டுமே ட்ரூ காலர் வழங்குகிறது.
’அழைப்பவரது பெயரை திரையில் காட்டுவது’ என்ற ட்ரூ காலர் செயலியின் அடிப்படை செயல்பாட்டை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களே விரைவில் அமல்படுத்த உள்ளன. இதனால் தனது வணிகம் பாதிக்கும் என்பதால், ட்ரூ காலர் மேம்பட்ட வசதிகள் பலவற்றை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அவற்றில் ஒன்றாக ஸ்பேம் அழைப்புகளை தானாக துண்டிக்கும் மேக்ஸ் வசதியும் ஒன்றாகும்.