மொஸ்கோவை உலுக்கிய தாக்குதல் – உயிரும் பலி எண்ணிக்கை – இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ
மொஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பாக பதிவான வீடியோக்கள் இணையத்தை கலங்கடித்து வருகின்றன.
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில், அரங்கினுள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 143 பேர் இறந்துள்ளனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே பயங்கரவாதிகள் இசை அரங்கினுள் நுழைவதும், குருவி சுடுவதுபோன்று கண்ணில் படுவோரை சுட்டுக்கொல்வதுமாக பதிவான வீடியோக்கள் இணையத்தை கலங்கடித்து வருகின்றன. பயங்கரவாத தாக்குதலின்போது பயங்கரவாதிகள் கண்ணில் படாது பதுங்கியோர் மற்று சிசிடிவி பதிவுகள், மொஸ்கோ கோரத்தை வெளியுலகுக்கு தெரிவித்து வருகின்றன.
தாக்குதலில் ஈடுபட்டோர் தப்பிச் சென்றதில், ரஷ்யாவின் பாதுகாப்புப் படையினர் அவர்களை நீண்ட துரத்தலின் இறுதியில் மடக்கி கைது செய்தனர்.
இந்த வகையில் 11 சந்தேக நபர்கள் ரஷ்ய போலீஸார் விசாரணை வளையத்தில் ஆட்பட்டுள்ளனர். இவர்களில் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரும் அடங்குவார்கள்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனினும் உக்ரைன் உதவியுடனே இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைன் எல்லை வழியாக உள்ளே நுழைந்து, அதன் மூலமே தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை உக்ரைன் மறுத்துள்ளது. மாஸ்கோ தாக்குதல் சம்பவம் ரஷ்ய உளவுத்துறை ஏற்பாட்டில் நடந்திருக்கலாம் எனவும் உக்ரைன் சந்தேகம் கிளப்பியுள்ளது. மாஸ்கோ தாக்குதலில் உக்ரைன் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவதை அமெரிக்காவும் மறுத்துள்ளது. இந்தியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மாஸ்கோ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மாஸ்கோ மீது பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என அமெரிக்காவின் உளவுத்தகவல் அடிப்படையில் 2 வாரங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.