லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் மோசமாக நடத்தப்பட்ட உணவகம்! 27,000 பவுண்ட் அபராதம்
லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் சவுத்ஹோல் பகுதியில் நடத்தி செல்லப்பட்ட Cash & Carry என அழைக்கப்படும் உணவத்திற்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான தரத்தில் நிர்வகிக்கப்பட்டமையினால் இந்த மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈலிங் உணவுப் பாதுகாப்புக் குழுவினர் இந்த உணவகம் தொடர்பில் பல வருடங்களாக கண்கானித்ததுடன் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 43 சவுத் வீதியில் உள்ள சிரா Cash & Carry உரிமையாளர்கள் மற்றும் மேலாளருக்கு 27,000 பவுண்டுகளுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவு சுகாதாரத் தரங்களைக் கடைப்பிடிப்பதில் இந்த உணவகம் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தது.
2009 ஆம் ஆண்டு முதல் எட்டு முறை பரிசோதிக்கப்பட்டது. இதில் 5 க்கு 2 விட அதிகமாக தரநிலை புள்ளிகளை பெறவில்லை. இந்த புள்ளிகளுக்கமைய உணவகத்தின் மேம்பாடு அவசியம் என்பதனை குறிக்கின்றது.
இறுதியாக மேற்கொள்ளப்பட்ட 2 ஆய்வுகளில் 0 மதிப்பீடுகளையே இந்த உணவகம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் உணவகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, Uxbridge நீதவான் நீதிமன்ற விசாரணைகளில், உணவகம் மிக சமீபத்திய ஆய்வில், மிக மோசமான தரநிலைகளை பெற்றதாகவும், உணவக வளாகம் முழுவதும் பூச்சிகள் காணப்பட்டதாகவும், கடைத் தளம் மற்றும் கிடங்கில் உணவுக்கு அடுத்த அலமாரிகளில் கழிவுகள் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக பல எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட போதிலும், உணவக உரிமையாளர்கள் பூச்சி பிரச்சனையை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை செயல்படுத்தவில்லை. மற்ற சுகாதார பிரச்சினைகளுக்கும் சிறிய அளவிலான முன்னேற்றமே காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு உணவு சுகாதாரக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டு, 28,000 பவுண்டுக்கு மேல் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.