மனித மூளைக்குள் நியூராலிங்க் சிப் – மனதில் நினைத்தை அப்படியே செய்யும் கணினி
முதல் முறையாக மனித மூளைக்குள் சிப் பொருத்தப்பட்டு, அந்த நபர் தனது மனதில் நினைக்கும் சிந்தனைகள் மூலம் கணினியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடும் வீடியோவை எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நவீன உலகத்தில் தொழில்நுட்பம் மிக வேமாக அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.
தொழில்நுட்பத்தில் புது புது கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்தவகையில், தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாகவும், உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, மனித மூளைக்குள் வயர்லெஸ் சிப் பொருத்தி சிந்தனைகளை உருவாக்கும் விதமான நியூராலிங்க் நிறுவனத்தின் திட்டம் சமீப காலமாக பரிசோதனையில் இருந்து வருகிறது. நரம்பியல் மருத்துவத்தில் இருக்கும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதலில் குரங்குகளுக்கு சிப் பொருத்தி நடத்திய சோதனை வெற்றி பெற்ற நிலையில், தற்போது மனித மூளைக்குள் சிப் பொருத்தி சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி, மனிதனின் சிந்தனைகளை மற்றும் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இணைப்பை உருவாக்கும் விதமாக சிப் ஒன்றை மனித மூளைக்குள் பொருத்தி பல்வேறு சோதனைகளை நியூராலிங்க் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், தற்போது முதல் முறையாக மனித மூளைக்குள் சிப் பொருத்தப்பட்டு, அந்த நபர் தனது மனதில் நினைக்கும் சிந்தனைகள் மூலம் கணினியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடும் வீடியோ ஒன்றை எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு விபத்தில் நரம்பியல் செயல்பாடு பாதிக்கப்பட்ட 29 வயதான நோலண்ட் அர்பாக் என்ற நபரின் மூளைக்குள் நியூராலிங்க் சிப் பொருத்தப்பட்ட பிறகு, லேப்டாப்பில் வீடியோ கேம்ஸ், செஸ் போட்டிகளை தனது சிந்தனை மூலம் விளையாடியதாக கூறப்படுகிறது. அதன்படி, மூளைக்குள் சிப் பொருத்தப்பட்ட அந்த நபர், தான் நினைக்கும் சிந்தனைகள் மூலம் லேப்டாப்பில் செஸ் விளையாடுகிறார்.
அதாவது, அவர் தனது மனதில் நினைப்பதை லேப்டாப்பில் கர்சர் நகர்ந்து செஸ் காய்கள் நகர்வதை பார்க்க முடிகிறது. இதுதொடர்பாக சிப் பொருத்தப்பட்ட நபர் கூறியதாவது, இந்த தொழில்நுட்பம் என் வாழக்கையை மாற்றிவிட்டது. மூளைக்குள் சிப் வைப்பதற்கான அறுவை சிகிச்சையும் ஈசியாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும், இந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.