பாதுகாப்பு அமைச்சர் விமானத்தின் மீது தொழில்நுட்பத் தாக்குதல் நடத்திய ரஷ்யா – பிரிட்டன் குற்றச்சாட்டு
பிரிட்டனின் பாதுகாப்புத்துறை அமைச்சரை ஏற்றிச்சென்ற ராணுவ விமானத்தின் மீது ரஷ்யா தொழில்நுட்பத் தாக்குதல் நடத்தியதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.
தங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை ஏற்றிச்சென்ற ராயல் விமானப்படையின் ஜெட் விமானத்தின் சிக்னல்களை ரஷ்யா முடக்கியதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது. ’தஸால்ட் 900எல் எக்ஸ் ஃபால்கன்’ என்ற ராணுவத் தேவைகளுக்கான பிரிட்டனின் விமானம் நேற்று முன்தினம் ரஷ்ய எல்லையருகே பறந்தபோது, சுமார் 30 நிமிடங்களுக்கு விமானத்தின் எலெக்ட்ரானிக் சாதனங்களில் மர்ம குறுக்கீடு நடந்ததாக பிரிட்டன் அரசின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் தற்போது தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ், போலந்தில் நடைபெற்ற நேட்டோ அணியினரின் போர்ப்பயிற்சிகளை பார்வையிட்டதும், அங்கிருந்து விமானத்தில் திரும்பும்போது இந்த சம்பவம் நேரிட்டிருக்கிறது. மாஸ்கோவிற்கு மேற்கே 1200 கிமீ தொலைவில் பால்டிக் கடலில் கலினின்கிராட் அருகே, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சரின் விமானம் பறந்தபோது அதில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் ஜிபிஎஸ் நுட்பம் திடீரென ஜாம் ஆனதை விமானிகள் கண்டறிந்ததும் பதற்றம் ஏற்பட்டது. ஆகாயத்தில் பறக்கும் விமானம் திசையறியவும், இலக்கை அடையவும் இந்த ஜிபிஎஸ் வழிகாட்டல் அவசியம்.
ஜிபிஎஸ் வசதி ஜாம் ஆனது விமானத்தின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லை என்றபோதும், அதன் இயல்பான பறத்தலை குலைக்கும் நோக்கிலும், திசை மாறச் செய்யும் நோக்கிலும் இந்த தொழில்நுட்ப தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பிரிட்டன் கருதுகிறது. கலினின்கிராட் அருகே பிரிட்டன் ராணுவ விமானத்தின் GPS முடங்கியதின் பின்னணியில் ரஷ்யாவின் தாக்குதல் இருந்ததாகவும் ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.
பிரிட்டன் ராணுவ விமானங்களில் திசையறிதலுக்கும், பறத்தலுக்கும் வழிகாட்ட GPS-க்கு அப்பாலும் பல தொழில்நுட்ப வசதிகள் உண்டு. எனவே மாற்று உபாயங்களை பயன்படுத்தி பிரிட்டன் ராணுவ விமானம் பாதுகாப்பாக இலக்கை நோக்கிச் சென்றது. இந்த மின்னணு தாக்குதலின்போது, விமானத்திலிருந்த செல்போன்களும் இணைய வசதியை இழந்தன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக பிரிட்டன் ராணுவ அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தொடர்ந்து முழங்கி வருகிறார். இதன்பொருட்டு பிரிட்டன் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் எனவும் கிராண்ட் ஷாப்ஸ் வலியுறுத்தி வருகிறார். கூடவே நேட்டோ அணிகளின் போர்ப்பயிற்சியை அவர் பார்வையிட வந்ததையும் ரஷ்யா ரசிக்கவில்லை.
முன்னதாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிரான, உக்ரைனின் போர் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் தொடர்ந்து தோள்கொடுத்து வருகிறது. ராணுவம் சார்ந்த ஆதரவாக உக்ரைனுக்கு இதுவரை சுமார் 13.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகளை பிரிட்டன் வழங்கியுள்ளது. மேலும் உக்ரைனின் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, ராணுவ உளவுத் தகவல்களையும் உக்ரைனுக்கு பகிர்ந்து வருகிறது.
இந்த வகையில் ரஷ்யாவின் மறைமுக எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் பிரிட்டனின் ராணுவ அமைச்சர் பயணித்த விமானத்தின் மீது ரஷ்யா தொழில்நுட்ப தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் பிரிட்டன் அமைச்சர் உயிருக்கு ஆபத்து எழுந்திருப்பின், ரஷ்யா – பிரிட்டன் இடையிலான நேரடி போருக்கும் அந்த அசம்பாவிதம் வழிவகுத்திருக்கும்.