காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 21 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி போர் வெடித்தது. இந்த போரில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியரகள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் காசாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்தநிலையில் தென்கிழக்கு காசாவில் உள்ள குவைத் ரவுண்டானாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் மற்றும் சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் ஏற்படாது என நெதன்யாகு கூறி வருகிறார். அதேசமயம், போரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.