பெங்களூர் -ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அடித்துக் கொலை… காரில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!
பெங்களூருவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் காரில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா யாதவ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த கிருஷ்ணா யாதவ், காகிலுவி அருகே அலுவலகம் வைத்திருந்தார். இவர் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக யலஹங்காவில் வசித்து வந்தார். நேற்று இரவு காரில் வெளியே சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், பெல்லாரி சாலையில் உள்ள பாகலூர் கிராஸ் அருகே அவரது கார் இன்று சாலையோரம் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள், யலஹங்கா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த பொலிஸார், காரை சோதனையிட்டனர். அப்போது காருக்குள் காயங்களுடன் கிருஷ்ணா யாதவ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக அவரது உடலைக் கைப்பற்றி பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்ததும் கிருஷ்ணா யாதவின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்த கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. அப்போது, நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கிருஷ்ணயா யாதவ் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணா யாதவை அடித்துக் கொலை செய்து விட்டு அவரது உடலை கொலையாளி காரில் விட்டு விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேக்கின்றனர். அத்துடன் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.
தொழில் போட்டி காரணமாக கிருஷ்ணா யாதவ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். பெங்களூருவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.