இஸ்ரேல் – ஹமாஸ் போரில் முதல் இந்திய உயிரிழப்பு; இருவர் படுகாயம்
இஸ்ரேல் மீதான ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் பலியானார். இஸ்ரேல் – ஹமாஸ் போரின் முதல் இந்தியர் உயிரிழப்பாக இந்த சம்பவம் பதிவாகி இருக்கிறது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை – காசாவின் ஹமாஸ் போராளிகள் இடையிலான மோதலில் இருதரப்பு குடிமக்கள் மட்டுமன்றி கணிசமான வெளிநாட்டினரும் பலியாகி வருகின்றனர். கடந்தாண்டு அக்டோபர் 7 அன்றைய, இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஆயுதக் குழுவினர் ஊடுருவல் மற்றும் தாக்குதலின் போது, இவ்வாறு வெளிநாட்டினர் பலரும் கொல்லப்பட்டனர்.மேலும், இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் கடத்திச் சென்ற சாமானியர்களில் பல வெளிநாட்டினரும் அடங்குவர். அவர்களில் அமெரிக்கா சுற்றுலா பயணிகள் மற்றும் தாய்லாந்து தொழிலாளர்கள் எனப் பல பிணைக்கைதிகள் இடைக்கால போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேலில் தொழிலாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் என குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கடந்த 6 மாதங்களாக அங்கே நீடிக்கும் மோதல் சம்பவங்களில் சிக்காது தப்பித்து வந்தனர். இதனிடையே முதல் அசம்பாவிதமாக, இந்தியர் ஒருவர் நேற்றைய ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் கொல்லப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள், வடக்கு இஸ்ரேலில் உள்ள பழத் தோட்டம் ஒன்றில் பணியாற்றி வந்தபோது நேற்று ஏவுகணைத் தாக்குதலுக்கு ஆளானார்கள்.
வடக்கு இஸ்ரேலின் மார்கலியோட் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 3 தொழிலாளர்களில், கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த 31 வயதான நிபின் மேக்ஸ்வெல் என்பவர் பரிதாபமாக உயிரிழிந்தார். ஜோசப் ஜார்ஜ், பால் மெல்வின் என காயமடைந்த இதர 2 தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லாவின் கோழைத்தனமான தாக்குதல் என இந்த சம்பவத்தை வர்ணித்திருக்கும் இஸ்ரேல் தேசம், உயிரிழந்த இந்தியர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் இன்று காலை வெளியிட்ட பதிவுச் செய்தியில், “நேற்று மதியம் வடக்கு கிராமமான மார்கலியோட்டில் பழத்தோட்டத்தில் பயிரிட்டுக்கொண்டிருந்த அமைதியான விவசாயத் தொழிலாளர்கள் மீது ஷியா பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது மற்றும் இருவர் காயமடைந்தது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் நீளும் அந்த பதிவில், “உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது பிரார்த்தனைகள். காயமடைந்தவர்களுக்கு இஸ்ரேலிய மருத்துவமனைகள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. பயங்கரவாதத்தால் காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களை, இஸ்ரேல் – வெளிநாட்டினர் என்ற பேதமின்றி சமமாகவே கருதுகிறோம். இழப்பு கண்ட குடும்பங்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு உதவிகளை வழங்கவும் நாங்கள் இருப்போம்” என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தோட்டத் தொழிலாளர்கள் மீது விழுந்த ஏவுகணை, லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பால் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போர் தொடங்கியதில் இருந்தே ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவின் ஷியா பிரிவு ஆயுததாரிகள், ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வடக்கு இஸ்ரேலை குறிவைத்து நடத்தி வருகின்றனர்.