அமெரிக்கா-மோட்டல் அறையில் இருந்து கேட்ட பெண்ணின் அலறல் …பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இங்ஸ்டர் பகுதியில் மோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. டெட்ராய்ட் நகரில் இருந்து 32km தொலைவில் அமைந்த இந்த மோட்டலின் அறை ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதனை கவனித்த மிச்சிகன் பொலிஸார் உடனடியாக சென்று அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
இதில், அந்த அறையில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவரருகே, துப்பாக்கி, போதை பொருட்கள் மற்றும் பல செல்போன்கள் கிடந்துள்ளன. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் பொலிஸார் சேர்த்தனர். அவருக்கு தற்போது கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.
7 ஆண்டுகளுக்கு முன், 2017ம் ஆண்டில் அந்த இளம்பெண் காணாமல் போய் விட்டார். அவரை பொலிஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், 30 வயது நெருங்கிய அவரை பொலிஸார் மீட்டுள்ளனர். அவருடைய குடும்பத்தினரும் தகவல் அறிந்து வந்து இளம்பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர்.
இதுபற்றி மிச்சிகன் மாகாண பொலிஸ் அதிகாரியான லெப்டினன்ட் மைக் ஷா கூறும்போது, ஒரு பெண் அழுவது போன்ற அலறல் சத்தம் கேட்டது. அதனால், குறிப்பிட்ட பகுதிக்கு நாங்கள் சென்றோம். மோட்டலின் கதவு பூட்டியிருந்தது. அதனை உடைத்து, உள்ளே சென்றோம் என கூறினார்.
அந்த பெண்ணின் அடையாளம் பற்றிய பிற விவரங்களை வெளியிட பொலிஸார் மறுத்து விட்டனர். அதிகாரி மைக் ஷா தொடர்ந்து, அந்த பெண்ணிடம் குற்ற சம்பவம் எதுவும் நடந்து உள்ளதா? என நாங்கள் விசாரிப்போம். மனித கடத்தல், வன்முறையான சூழல் அல்லது வேறு ஏதேனும் சம்பவம் நடந்து இருக்கிறதா? என்றும் விசாரிக்கப்படும் என்றார்.
அவரை யாரேனும் கடத்தி சென்றிருப்பார்கள் என நான் கூற விரும்பவில்லை. ஏனெனில், ஏதோ ஓர் உறவாக தொடங்கி, பின்னர் அவருடைய விருப்பத்திற்கு எதிராக கொண்டு செல்லப்பட்டு, அவர் அடைத்து வைக்கப்பட்டு இருக்க கூடும் என கூறியுள்ளார். அந்த அறையில், அவர் அடைத்து வைக்கப்பட காரணம் என்ன? யாரேனும் அவரை கடத்தி சென்றனரா? அல்லது விருப்பத்தின் பேரில் அவர்களுடன் அவர் சென்றாரா? ஆகியவை பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.