வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை: 7 பேர் கொண்ட குழுவின் வெறிச்செயல்!
ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதிகள் இருவர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலாவிற்காக வருகை தந்திருந்தனர். தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தும்கா மாவட்டத்தில் குறுமுகத் என்ற பகுதிக்கு இருவரும் சுற்றுலா சென்றனர். அங்கு இரவு தற்காலிக டென்ட் அமைத்து இருவரும் தங்கியிருந்தனர். காலையில் அவர்கள் இருசக்கர வாகனம் மூலமாக பீகார் சென்று அங்கிருந்து நேபாள் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் இருவரும் தங்கி இருந்த இடத்திற்கு சென்ற 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கணவரை அடித்து காயப்படுத்தி விட்டு, இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இது தொடர்பாக அந்த சுற்றுலா பயணி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணிகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.
இதனிடையே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், மீதமிருக்கும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜார்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது மாநிலத்தில் நிலவும் மோசமான சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து அவர் கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.