பாலஸ்தீனர்களை விடுவிக்க கோரி இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை உறுப்பினர்!
அமெரிக்க விமானப்படையின் செயலில் கடமையாற்றும் உறுப்பினர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டார்.
“இனிமேலும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன். நான் ஒரு தீவிர எதிர்ப்புச் செயலில் ஈடுபடப் போகிறேன் ஆனால், பாலஸ்தீனத்தில் மக்கள் தங்கள் காலனித்துவவாதிகளின் கைகளால் அனுபவித்து வருவதை ஒப்பிடும்போது, அது தீவிரமானது அல்ல. இதைத்தான் நமது ஆளும் வர்க்கம் சாதாரணமாக முடிவெடுத்துள்ளது,” என்று 25 வயதான ஆரோன் புஷ்னெல் தன்னைத்தானே தீக்குளித்துக் கொள்வதற்கு முன் கூறியுள்ளார்.
உடனடியாக அந்நபர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவருடைய நிலைமை கவலைக்குரிய வகையிலேயே உள்ளது.
அவர் தீக்குளிக்க முயற்சிக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளன. விசாரணையில் அவருடைய பெயர் ஆரன் புஷ்நெல் என்பதும் அமெரிக்க விமான படையில் பணியில் இருந்த ஊழியர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனை அமெரிக்க விமான படையின் செய்தி தொடர்பாளர் ரோஸ் ரைலியும் உறுதி செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லைவ்ஸ்ட்ரீமிங் தளமான ட்விச்சில் ஒளிபரப்பப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட வீடியோவில், அக்டோபர் முதல் காஸாவில் இஸ்ரேலிய படுகொலைகளை குறிப்பிடும் வகையில், “இனி இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன்” என்று புஷ்னெல் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், “நான் தீவிர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன்” என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் டிசம்பர் 2023 இல், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஒருவர் தீக்குளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.