வொஷிங்டனில் தூதரகத்துக்கு முன்பாக பரபரப்பை ஏற்படுத்திய நபர்
அமெரிக்கவின் வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்பாக ஒருவர் தமக்கு தாமே தீ வைத்துக்கொண்ட சம்பவத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தீயணைப்புத் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
வொஷிங்டன் பொலிஸார், இரகசிய சேவை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது.
குறித்த நபர் தூதரக அதிகாரிகளுக்கு பரீட்சயமான நபர் அல்லவென இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
தூதரகத்துக்கு அருகிலிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் வாகனமொன்று வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது.
எனினும் அதிலிருந்து ஆபத்தான பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த சம்பவத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் முன்பாகவும் நபரொருவர் இவ்வாறு தமக்கு தாமே தீயிட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.