விளையாட்டு

ஐபிஎல் தொடரில் 94 போட்டிகள்: பிசிசிஐ தீவிர ஆலோசனை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2028-ம் ஆண்டு சீசனில் ஆட்டங்களின் எண்ணிக்கையை 74-ல் இருந்து 94 ஆக அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

2028-ம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனை 94 போட்டிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதேவேளையில் புதிய அணிகளை சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2022-ம் ஆண்டு சீசனில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அறிமுகமாகின.

இதனால் ஐபிஎல் தொடர் 60 ஆட்டங்களில் இருந்து 74 ஆட்டங்களாக அதிகரித்தது. நடப்பு சீசனில் கூட போட்டிகளின் எண்ணிக்கையை 74-ல் இருந்து 84 ஆக அதிகரிக்கும் திட்டம் இருந்தது. ஆனால் அட்டவணை திட்டமிடலில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஒரே நாளில் 2 போட்டிகள் அதிகம் நடத்தப்படுவதை ஒளிபரப்பாளர்கள் விரும்பாததால் 84 போட்டிகளை நடத்தும் திட்டம் சாத்தியப்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் ஆட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஐபிஎல் நிர்வாகம் உறுதியாக உள்ளது. எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தில் (எஃப்.டி.பி) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணை மார்ச் நடுப்பகுதியில் இருந்து மே இறுதி வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் சேர்மன் அருண் துமால் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “ 2028-ம் ஆண்டு சீசனுக்காக தொடங்கும் அடுத்த ஊடக உரிமை சுழற்சியில் 94 போட்டிகளாக விரிவுபடுத்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலிக்கும். நிச்சயமாக, அது ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.

இதுகுறித்து ஐசிசி-யிடம் ஆலோசித்து வருகிறோம். மேலும் பிசிசிஐ-க்குள்யேயும் ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறது. இருதரப்பு தொடர்கள், ஐசிசி தொடர்கள், தொழில்முறை டி 20 கிரிக்கெட் தொடர்கள் தொடர்பாக ரசிகர்களின் ஆர்வம் எவ்வாறு மாறுகிறது என்பதை பற்றி தீவிரமாக பேச வேண்டும். மேலும் விளையாட்டின் பங்குதாரர்களுக்கு அதிகபட்ச மதிப்பை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். நாங்கள் போட்டியை நடத்துவதற்கான அட்டவணையை அதிகரிக்க விரும்புகிறோம். ஒரு கட்டத்தில் 84 அல்லது 94 வரை செல்லலாம். இந்த வகையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தனது சொந்த மைதானத்திலும் எதிரணியின் மைதானத்திலும் விளையாட வேண்டும். அதற்கு உங்களுக்கு 94 ஆட்டங்கள் தேவை.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும், சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அதன் பிறகு ஐபிஎல் தொடர். அதனால்தான் இம்முறை போட்டியை 74-ல் இருந்து 84 ஆக அதிகரிப்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்யப்பட்டது, ஆனால் பொருத்தமான நேரத்தில் இதற்கான முடிவை எடுப்போம். முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வந்தாலும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான உடனடி திட்டம் இல்லை.

நடப்பு சீசனில் இதற்கு முன்னர் போட்டியை வெல்லாத அணி கோப்பையை வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். டெல்லி கேப்பிடல்ஸ் கடந்த சில ஆண்டுகளில் விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் கோப்பையை வென்றது இல்லை. பஞ்சாப் கிங்ஸ் ஒரே ஒரு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, ஆர்சிபி அவ்வப்போது சிறப்பாக செயல்பட்டது. இந்த அணிகளில் சில இறுதிப் போட்டியில் போட்டியிட்டால், ஒரு புதிய சாம்பியனை பெறுவோம். இவ்வாறு அருண் துமால் கூறியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ