இந்தியாவில் லொரி மீது சரக்கு வாகனம் மோதியதில் 9 பெண்கள்,4 குழந்தைகள் பலி

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30 பேருக்கும் மேலானோர் காயமடைந்தனர்.
சட்டவுட் கிராமத்தைச் சேர்ந்த 50 பேருக்கும் மேற்பட்டோர் பனார்சி என்ற கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு, திங்கட்கிழமை (மே 12) அதிகாலை 2 மணியளவில் சிறிய ரக லாரியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனத்துடன் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். அதில் 9 பெண்கள், 2 சிறுமிகள், 1 சிறுவன், 6 மாதக் குழந்தை ஆகியோர் அடங்குவர்.
காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு கரௌரா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
காவலர்களும் உள்ளூர்வாசிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல பயணிகள் சேதமடைந்த வாகனத்துக்குள் சிக்கியிருந்ததால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கௌரவ் சிங் கூறுகையில், “மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்று தெரிவித்தார்.