கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் லொரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 9 பேர் பலி

விநாயகர் ஊர்வலத்தின்போது பக்தர்கள் மீது ஒரு லொரி மோதியதில், குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தைப் போலவே கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) இரவு உள்ளூர் மக்கள் பிள்ளையார் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்காகத் திரளாகக் கூடிய பக்தர்கள், ஊர்வலத்தில் பங்கேற்று நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி, ஊர்வலத்தில் சென்ற பக்தர்கள் மீது மோதியது. இதில் அந்த இடத்திலேயே எட்டு பக்தர்கள் உயிரிழந்துவிட்டனர்.
சில இந்திய ஊடகங்கள் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துவிட்டது என சனிக்கிழமை மாலை தெரிவித்தன.
ஊர்வலம் இரவு நேரத்தில் நடைபெற்றது. லொரி வந்து கொண்டிருந்தபோது, குறுக்கே ஒரு இருசக்கர வாகனம் வந்ததாகவும் அதன் மீது மோதுவதைத் தவிர்க்க ஓட்டுநர் முயன்றபோது, லொரி கட்டுப்பாட்டை இழந்ததாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்தக் கோர விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.