நைஜீரியாவில் இராணுவத்தின் தவறுதலான டிரோன் தாக்குதலால் பலியான 85 பொதுமக்கள்!
நைஜீரியாவில் இராணுவத்தின் டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் தவறுதலாக கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடக்குப்பகுதியில் உள்ள ஆயுதக் குழுக்கள் மீது அந்நாட்டு இராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது.கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் தவறுதலாக, முகம்மது நபியின் பிறந்தநாளை கொண்டாட கூடிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடந்ததால் 85 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தேடல் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 85 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நைஜீரிய இராணுவப் பிரிவின் தலைவர் கூறுகையில், ”நைஜீரிய இராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு வழக்கமான பணியில் இருந்தது. ஆனால் கவனக்குறைவாக அந்த நடவடிக்கைகள் சமூகத்தினை பாதித்தது” என தெரிவித்துள்ளார்.
மேலும் கடுனா பாதுகாப்பு ஆணையர் சாமுவேல் அருவான் கூறும்போது, காயம் அடைந்த 12க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் இன்னும் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.