31 வயதான அமைச்சர் மகனின் காலில் விழுந்து வணங்க முயன்ற 73 வயது எம்.எல்.ஏ.!
இந்தியாவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சரின் 31 வயது மகனின் காலில் விழுந்து , 73 வயதான பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.எல்.ஏ., வணங்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
தேவேந்திர குமார் ஜெயின் என்பவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.எல்.ஏ. ஆவார்.
தனது 73 ஆவது பிறந்தநாளை அண்மையில் இவர் கொண்டாடினார்.
இந்திய ஒன்றிய அரசின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதன்போது, கேக் வெட்டி, தேவேந்திர குமாருக்கு மஹாரியமான் ஊட்டி மகிழ்வித்தார்.
இதைத்தொடர்ந்து 31 வயதேயான மஹாரியமானின் காலில் 73 வயதான தேவேந்திர குமார் விழுந்து வணங்க முயன்றார்.
தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்க முயன்ற தேவேந்திர குமாரின் இந்தச் செயல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
“எனக்காக மஹாரியமான் பிறந்தநாள் வாழ்த்து பாடியதால் நான் உணர்ச்சிவசப்பட்டேன். இதனால்தான், அவரது கால்களைத் தொட முயன்றேன்.
இது முற்றிலும் கலாசார வெளிப்பாடு. இளம் வயதினரின் கால்களைத் தொடுவது குறித்து அரசியலமைப்பில் எதுவும் எழுதப்படவில்லை” என்று எம்.எல்.ஏ. தேவேந்திர குமார் ஜெயின் விளக்கமளித்துள்ளார்.
எனினும், அவரின் இந்த செயலை நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
அரசியலுக்காக சுயமரியாதையைக்கூட அடகு வைக்கின்றனர் என பலர் பதிவிட்டுள்ளனர்.





