சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 7 இலங்கையர்கள்! ஐவருக்கு மஞ்சள் அறிவிப்பு
சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 6,872 தப்பியோடியவர்களில் ஏழு இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் ‘தேடப்படுபவர்கள்’ என்று பட்டியலிடப்பட்டுள்ளனர்.
ஏனைய மூன்று பேர் தங்கள் பிரதேசங்களில் செய்த குற்றங்கள் தொடர்பாக வெளிநாடுகளால் செய்யப்பட்ட கோரிக்கைகளின் பேரில் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்டர்போலின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விபரங்களின்படி, இலங்கையர்களான, 38 வயதான டி சொய்சா ஜகமுனி சுஜீவா என்ற கொஸ்கொட சுஜீ, 48 வயதான நடராஜா சிவராஜா, 50 வயதான முனிசாமி தர்மசீலன், 35 வயதான விக்னராசா செல்வந்தன் ஆகியோர் இலங்கை சட்ட அமுலாக்க பிரிவினரால் தேடப்பட்டு வருகின்றனர்.
கொலை வழக்கு ஒன்று தொடர்பாக கொஸ்கொட சுஜீக்கும், மறைந்த அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்ய உதவியதற்கான குற்றச்சாட்டுக்காக நடராஜா சிவராஜாவுக்கும் சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தர்மசீலன் இரண்டு கைக்குண்டுகள் மற்றும் 200 தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வருகிறார்.
செல்வந்தன் மீது கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதேவேளை, வவுனியாவைச் சேர்ந்த 52 வயதான குமாரசாமி நவநீதன் ரொமேனியாவில் இடம்பெற்ற கொலை தொடர்பாக தேடப்படுகிறார்.
61 வயதான எலபொடகமவைச் சேர்ந்த மொஹமட் பௌமி போலி நாணயம் தொடர்பாக இந்தியாவாலும், 41 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் விஜயராஜா கொலை தொடர்பாக கனடாவால் தேடப்பட்டு வருகின்றார்.
இதேவேளை, ஏனைய ஐந்து இலங்கையர்களுக்கு சர்வதேச காவல்துறையினர் மஞ்சள் அறிவிப்பு வழங்கியுள்ளனர்.
பொதுவாக காணாமல் போனவர்களை, பெரும்பாலும் சிறார்களைக் கண்டறிய உதவுவதற்காக அல்லது அடையாளம் காண முடியாதவர்களை கண்டறிய உதவுவதற்காக மஞ்சள் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 31 வயதான பாலகிருஷன் நிரேஷ் என்பவர் வவுனியாவில் 2022 ஜனவரி 27 இல் காணாமல் போனதையும், 68 வயதாக வீபத்தே ரலலகே சமன் விஜேசிறி என்பவர் 2018 ஒக்டோபர் 13 இல் காணாமல் போனதையும் சர்வதேச காவல்துறையினர் பட்டியலிட்டுள்ளனர்.
20 வயதான கயிந்து கித்முக மதுரப்பெரும என்பவர் தனது 5ஆவது வயதில் கொழும்பில் காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு என்பது, நாடுகடத்தப்படுதல், சரணடைதல் அல்லது அதுபோன்ற சட்ட நடவடிக்கை நிலுவையில் உள்ள ஒருவரைக் கண்டுபிடித்து, கைது செய்ய, உலகெங்கிலும் உள்ள சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோருவதாகும்.